Monday, 1 March 2010

உன் கோரத் தவிப்பில்..

காற்று துளைக்காத
ஜன்னல் வழி
புயலாக வீசும்
உனது காதல் மந்திர வேள்வியின்
உக்கிரத்தில் நீ
ஆடிக் கொண்ட தாண்டவம்
அலறியடித்தபடி கண்ணெதிரே
சிதறி விழும்
இலத்திரன்களின்
உதிரம் உன்
கடும் நரபலி வேள்விக்கு
நாயகன் தேடுவதை
உரைத்து மாண்டன

காதலில் பிரிதல் ஒரு போர்க்களம் சேர்தல் ஒரு ஊடறுப்பு
வல்லவன் விட்டு நீங்கிய வேளைகள் வளர்த்தன விரகத் தீயை
வாட்டுவது நானாயினும் வாடுவது நீயல்லவோ

கையில் மன்மத பாணத்துடன்
ஏகினேன் கானகத்தில்
நீ வைத்திருந்து
கசக்கி கிழித்துப் போட்ட
மந்திரப் பொம்மையாக
கிழிந்து செல்கின்றன கால்கள்
கொட்டிய இரத்தத்தை உறிஞ்சி நீ குடிக்கிறாய்
உணர்கிறேன் வலியை
உன் காதல் தீயின் வெம்மையை

எல்லைக்குள் வந்துவிடாமல்
நீ வளர்த்த தீச்சுவர்
என்னை பிரிந்த
உன் கோரத் தவிப்பில்
என்னையே கொன்று
நீறு பூசும் அசுர நிலை
கிட்ட வந்து காதல் சொல்ல
உன் கால் இடுக்குகளுக்குள்
நசிந்து போகும் என் தேகம்
போர் போர் போர்

தடதகிட தாண்டவம் ஆடும் உன் உணர்வலைகள்
உன் கழுத்துவரை சுற்றிய நாகங்களாக
அடங்காத தாடகையின் அன்பு புதல்வி
எடுத்த காதல் விஸ்வரூபம் கண்டு கலங்கி விட்டேன்
ராவணன் மைத்துனன் நான்.

தேருக்கும் காற்றுக்கும் காத்திருந்து
அன்னத்தையும் புறாவையும்
தூதுவிட்ட அந்நாளிலும்
பஸ்க்கு காத்திருந்து
மதகு தேய்ந்து போன முன்னாளிலும்
காணொளியோ
சொல் மொழியோ
அற்ற அருவ நிலையில்
உருவம் தரு
இலத்திரன்களின்
உதிரத்தில் நீ
தீட்டி தீட்டி மார்பு செருக்கும்
போர் வாளிலும்
காதல் கொடும் போரின்
இழப்புக்கள் என்றும் ஒன்று தான்

வேலிகளை தாண்டாமல் வேள்வியை கெடுப்ப தெப்படி
ஆட்டிலறி பூட்டி எல்லை தாண்டி அடிக்கட்டோ
அருகில் வந்து அன்புரைதால் அடங்காத பிடாரியடீ
தூர நின்று தொட்டிட தோகையல்ல உன் தேகத் தீ

ஊடு பிரித்து
உன் துகில் கிழித்து
பல்குழல்கள் பூட்டி
மன்மத பாணம் எய்து
பாவி உன்
காதல் பிரமாண்டம்
கண்டு வியந்து
கந்தர்வங் கொண்டு
கொடுங் காமம் செய்து

மூடவந்த விரகத் தீயை
வேலிகளில் சூடிவிட்டு
வீட்டு நடுவில்
விஸ்வரூபமெடுத்து நிற்கும்
காதல் குவேனி
உன் காதலை
பிளந்து போட்டு இறந்து கிட

விடியும் பொழுதுகளில்
விஜயன் எனது
புணர்வுகள் ஒவ்வொன்றும்
புலிகளையும் சிங்கங்களையும்
பிரசவிக்கும்
போர் போர் போர்

Thursday, 25 February 2010

கொக்குவில் கை ஒழுங்கையில் எனது கால் தடங்கள்

ஒவ்வொரு இரவுகளும்
பேய்களும் முனிகளும்
தின்று விட்ட
இலைகளும் மரங்களும்
மாசிப்பனியில்
தோய்ந்து போய் நிற்கும்
ஈரலிப்பான எல்லாமே

இலைகளுக்கு கீழே
பதுங்கி இருக்கும் பனி நுரைகளை
காலைகளில் கண்டு பயந்ததும்
மாலையில் விட்டு வந்த
மரங்களும் செடிகளும்
மறுநாளும் அங்கேயே
நிற்பதை காண்பது
ஒரு மன நிறைவும் துணிவும்

மாமரத்தில் புல்லாங்குழல் ஊதி
கண்ணன் என்று நக்கல் அடிக்க பட்டதும்

பிளேன் போல பறந்து
இரும்பு படலையில்
நெத்தி அடிக்க ரத்தம் சிந்தியதும்

மீன் வாங்கும் பொழுதுகள்
கீரைக் கட்டு கொண்டு வரும் அப்பா
வல்லாரை அரைச்சு தந்து
மூளைக்கு வளர்ச்சி தந்த சித்தி

காட்டு வாழ்வு வளர்ந்தாலும்
பாடசாலை மட்டும்
உன்னி உன்னி உதைந்து தள்ளி
ஒரு உன்னதமான தோணியில்
ஏற்றிவிட்ட என் நவரத்தினராசா டீச்சர்,
(எனக்கு வேறை யாரையும் தெரியாது
எப்படி நான் இந்துக் கல்லூரி
அனுமதியில் சித்தியடைந்தேன் என்று சொல்லி காட்டுவதற்கு ..)

வீட்டு பசு சாந்தி
கறந்த பாலில் அம்மா
உருவகப்படுத்திய சாந்தி,
அவளது பையன்
அவனது குறும்பு துள்ளல்
அவனுடனான மேய்ச்சல்
தீபாவளிக்கு ஒரு
இறைச்சிக்கடைக்கு விற்கப்பட்ட
அந்த அவனது கடைசி பார்வை
எல்லாமே என்னுள்
இன்றும் இன்றும்
கண்ணீரோடு வாழ்கின்றன

பகலில் எருது போல உழுது வந்த புழுதிகளும்
இரவில் கைவிளக்கில் தெளிவில்லாது தெரிந்த புத்தக பாடங்களும்
காலை நேர தேநீர்
மதியத்துக்கான பிடுங்குபாடுகளில்
அவரவர் வீடுகளில்
கலகக்க
சுட்டிப் பையன் தாவீது
என்ற ஒரு கதா பாத்திரத்தின்
inspiration உடன் கையில் கற்களுடன்
பக்கத்து பனை வளவுக்குள் எறிந்த கற்கள்

மைனாக்கள் மேயும்
பின்னாளி வளவுக்குள்
பதுங்கி பதுங்கி
கண்ணை மூடி
பால் குடித்த பூனையாக
நிஜமாகவே மைனாவுக்கு
மிக அருகில் ..
அந்த மைனாவுக்கு தெரிந்திருக்கும்
நான் ஒரு குழந்தை என்று
அதுவும் பக்கத்திலேயே நின்றது
முதல் தொடுகை போல
முயலும் போதே பறந்து விட்டது

தூக்கணாங் குருவிக் கூடுகளும்
கள்ளன் போலீஸ் விளையாட்டுகளும்

ஆர்ப்பரித்து அடங்கி போய்
ஒரு ஊமை மனைவியுடன்
வாழ்வில் ஒதுங்கி வந்திருந்த
ஒரு அயலவருடன் அவமதிப்பு செய்ததும்
அவர் அமைதி காத்து சென்றதும்

அந்த அடங்கா ஆணவமும்..
இன்றைய இருபது வருட
வளர்ச்சின் உச்சத்தில் தெரிகிறார்
எனக்கு ஒரு தோழனாக
அந்த மண்ணின் மைந்தன்

அவர் வளர்த்த கால்நடைகளும்
அவர் செருக்கிய புல்லுக் கட்டுகளும்
இப்போது ..
ஒரு அமைதியான வாழ்கையை
அருகில் இருந்து தான் தொலைத்து
இருப்பதை கண்களில் காட்டுகின்றன
ஈரமான நினைவுகளாக